Sunday, 21 August 2016

உலக குரு வள்ளலார் - 2



 
இந்திய ஞானபூமியிலே யுகம் யுகமாக அருளாளர்கள் ஞானிகள்
ரிஷிகள் மகான்கள் தோன்றி மக்களுக்கு வாழும் நெறியை
உபதேசித்து, முடிவில் மனித பிறவியின் இலட்சியமான இறைவனோடு
ஐக்கியமாகும் வழியையும் காட்டி, விழியிலே விளங்கும் விமலனை
உணர்த்தியும் சென்றனர்!

எங்கு சென்றனர்? எங்கிருந்து வந்தோமோ அங்கே! செல்வதற்கு முன்
பலர்தான் பெற்ற அனுபவத்தை புராணம் கதை என ஏடுகளில்
எழுதி பிற்கால சந்ததிகள் அறியட்டுமே உணரட்டுமே என விட்டுச்
சென்றனர்! ஒழுக்கம் பண்பு நீதிநெறி சத்தியம் அகிம்சை அன்பு
ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய அவசியத்தை
வலியுறுத்தினார்! மனிதன் மனிதனாக வாழ வழி காட்டினார்!

இன்று வரை இவ்வுலகில் தோன்றிய அருளாளர்கள் அனைவரும்
சொன்ன கருத்து இதுதான்! கடவுள் ஒருவரே! அவர் உருவமும்
அருவமும் இல்லா அருஉருவான ஒளியே! பேரொளியே!
பிரபஞ்சமெங்கும் ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாயிருக்கும் ஒளியே!
எங்கும் நிறைந்தவன்! எல்லாம் வல்லவன்! எல்லாம் அவன் செயல்
ஆதியும் அந்தமும் அவனே! கடவுள் இறைவன் பரம்பொருள்
பரமாத்மா இன்னும் பலவிதமாக போற்றப்படுகிறான் அந்த ஒரே
கடவுளே!

எல்லாமுமான அந்த இறைவனே பஞ்ச பூதங்களாக, நிலம் நீர்
நெருப்பு காற்று ஆகாயம் என விளங்குகிறான்! சர்வமும் இதுவாகவே
உள்ளது! எல்லாமே பஞ்சபூத கூட்டுறவேயாகும் பஞ்சபூதத்திலும் பஞ்ச
பூதமுண்டு ! இதுவே அதிசயம்! ஒன்றுக்குள் ஒன்று அடக்கம்!

மனிதனும் பஞ்ச பூதத்தால் உருவானவனே! உடல் மண் அம்சம்,
இரத்தம் நீர் அம்சம், உயிர் நெருப்பம்சம், வாயுஅம்சம் சுவாசம்
உடலுக்குள் ஆகாச வெளியிலே இவையனைத்தும்!  உடல் எனும்
கூட்டை உருவாக்கிய அந்த மாயக் குயவனார், இறைவன் எவ்வளவு
தேர்ந்த திறமை சாலி ?! சற்று சிந்தியுங்கள்!

நம் உடல் நாம் விரும்பிய படியா வந்தது? நாம் எப்படி பிறந்தோம்?
ஏன் பிறந்தோம்? எங்கிருந்து பிறந்தோம்?நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுகமாக வளர்வது எப்படி? எப்படி வாழ்கிறோம்?
எதற்க்காக வாழ்கிறோம்? பலரும் இவையொன்றும் தெரியாமலே
இறந்து போகின்றனர்!?
       

No comments:

Post a Comment